அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜோர்ஜ் ஃப்ளாயிட்டின் கொலை வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கினை விசாரிக்கும் 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர், ஃப்ளாயிட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றில் கொடூரமான நிகழ்வு என்று குறிப்பிட்டனர்.
அதன்பின்னர் 45 சாட்சியங்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஃப்ளாயிட் வழக்கில் டெரிக் சாவின் குற்றவாளி என்று அவர்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டெரிக்கின் பிணை விண்ணப்பத்தையும் நீதிபதிகள் இரத்து செய்தனர்.
அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத் தலைநகரான மின்னாபொலிஸ் நகரில், கடந்த வருடம் மே மாதம் 25ஆம் திகதி ஜோர்ஜ் ஃப்ளாயிட்டை கைது செய்ய முயற்சித்தபோது, அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில், ஒரு காருக்கு அடியில் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து பொலிஸார் அழுத்துவதும் போன்ற ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த நிகழ்வு உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், அவரது மரணத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.