18 வயதைக் கடந்த அனைவருக்கும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா தடுப்பூசியின் விலை குறைவாக காணப்படுகிறது.
நாட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்த காலக்கட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு அதன் உற்பத்தியை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் தனியார் சுகாதார நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். மருத்துவமனைகளுடன் இணைந்து அந்நிறுவனங்கள் செயற்பட வேண்டும். இதற்கு மத்திய அரசு போதுமான ஒத்துழைப்புகளை வழங்கும்’ எனத் தெரிவித்தார்.