பிரான்ஸின் நீஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், தொடர்புடைய ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியை சேர்ந்த ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) 28 வயதான எண்ட்ரி இ எனும் அல்பேனிய நாட்டு குடியுரிமை கொண்டவர் கைதுசெய்யப்பட்டார்.
பிரான்ஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய ஐரோப்பிய பிடியாணைக்கு அமைவாகவே இவர் இத்தாலியின் தெற்கு பிராந்தியமான நேபிள்ஸ் நகருக்கு அருகில் வைத்து கைது கைதுசெய்யப்பட்டார். இவர் விரைவில் பிரான்ஸ் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்படுவார் எனவும் அறிய முடிகிறது.
இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் 8பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டின் பின்னரே இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி, நீஸ் நகரின் ப்ரெமனேட் டெஸ் ஆங்கிலாய்ஸ் கடற்கரையில், மொஹமட் லஹூயீஜ் பவுலெல் எனும் பயங்கரவாதி கனரக வாகனம் ஒன்றினை கூட்டத்துக்குள் வேகமாக செலுத்தி மோதித் தள்ளியதில் 86 பேர் உயிரிழந்தனர். இதன்பின்னர் தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.