தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் தமிழகத்தில் கடந்த 20ஆம் திகதி முதல் இரவு 10மணி முதல் காலை 4மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபானக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளிட்டவைகள் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வைத்தியசாலைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், பத்திரிக்கை விநியோகம், பால் விநியோகம், அமரர் ஊர்தி சேவைகள், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஆம்புலன்ஸ், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.