மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத் தெரிந்தால் எதிர்ப்புகள் உருவாகும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே வைகோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் மாநில மொழிகளைப் படிப்படியாகவும் முற்றுமுழுதாகவும் ஒழித்துக்கட்டுவதே புதிய கல்விக் கொள்கையின் முதன்மையான நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் கற்க வேண்டும் என்பதற்காக ஊக்கத் தொகைகளையும் அறிவித்து பல்லாயிரக் கணக்கான கோடிகளை ஒதுக்கியுள்ளனர்.
இதேவேளை, தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் ஹிந்தி, சமஸ்கிருதத்தைப் படித்தாக வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கையானது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதால் அதனைத் தமிழகம் முற்றுமுழுதாக ஒதுக்கித்தள்ள வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே, புதிய கல்விக் கொள்கையை முதலில், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டதுடன் தற்போது குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் நேபாளி உட்பட 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழில் வெளியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், எதிர்ப்புக்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதற்காக திட்டமிட்டே தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ் மொழியின் சிறப்புக்களை மேடைகளில் முழங்கும் பிரதமர் மோடி அரசின் உள்நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் ஏழரைக் கோடி மக்கள் பேசும் செம்மொழியான தமிழைப் புறக்கணித்த மோடி அரசுக்கு கண்டனத்தைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.