உலகத்திலேயே மிகவும் விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
கடந்த 99 நாட்களில் மாத்திரம் சுமார் 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரவியல் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட தடுப்பூசி திட்டத்தில், 92.89 இலட்சம் பேருக்கு, முதல் டோசும் 59.94 இலட்சம் பேருக்கு, 2 ஆம் டோசும் போடப்பட்டுள்ளது.
மேலும் முன்கள ஊழியர்கள் 1.19 கோடி பேருக்கு, முதல் டோசும் 62.77 இலட்சம் பேருக்கு 2 ஆவது டோசும் போடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2 ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தில், 45- 60 வயது பிரிவினரில் 4.76 கோடி பேருக்கு, முதல் டோசும் 23.22 இலட்சம் பேருக்கு 2 ஆவது டோசும் போடப்பட்டுள்ளது.
இதேவேளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 4.96 கோடி பேருக்கு, முதல் டோசும் 77.02 இலட்சம் பேருக்கு, 2 ஆம் டோசும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள 3 ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.