கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டையே உலுக்கியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மாதாந்தம் இடம்பெறும் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினாலும், இப்போதைய இரண்டாம் அலை நாட்டையே உலுக்கியுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பரவல் குறித்த தகவல்களை நம்பத்தகுந்த ஆதாரங்களை வெளியிடுபவர்களிடம் இருந்து பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான காலத்தில் பல மருத்துவர்களால் இணையம் ஊடாக உளவியல் சிகிச்சைகள் வழங்கப்படுவதைப் பாராட்டியுள்ளார்.
இதேவேளை, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அர்பணிப்புடன் துணைநிற்கும் என மோடி கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக அனுப்புவதாகத் தெரிவித்துள்ள அவர், இயன்றவரை அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.