யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், குடு மற்றும் கஞ்சா கடத்தல் செய்துவந்த பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள், யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடல் வழியாக போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி நீண்ட காலமாக யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தக் கடத்தல்காரர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, கைதானவர்களிடம் இருந்து ஏழு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ், ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பன்னிரெண்டு தடவைக்கு மேல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்களைக் கடத்தியுள்ளதாகவும் கொழும்பு உள்ளிட்ட ஏனைய இடங்களுக்குத் தரைமார்க்கமாக போதைப் பொருட்களை விநியோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.