நாட்டில் நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
மூடிய மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அலுவலக வளாகத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரிப்பதை அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு மூடிய அறையில் குறிப்பாக குளிரூட்டப்பட்ட இடங்களில் மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள். எனவே, திறந்த யன்னல்கள் கொண்ட சூழலில் தங்க பரிந்துரைக்கப்படுகிறதாக தெரிவித்தார்.
மூடிய அறையிலோ அல்லது குளிரூட்டப்பட்ட அறையிலோ தங்கும்போது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், மக்கள் கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்படுகையில் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு அதிக அளவில் பரவும் தன்மையைக் கொண்டிருப்பதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.