மக்கள் தமக்கு வழங்கியுள்ள ஆதரவு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இரண்டு பிரதான கட்சிகளுக்கு அடுத்து முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், கூட்டணி இன்றித் தனித்துவமான கொள்கைகளை முன்வைத்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி படித்த இளைஞர்கள், எளிய பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலை மிகவும் எழுச்சிகரமாகச் சந்தித்தபோது தமக்குக் கிடைத்த ஆதரவைப் பார்க்கும்போது மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற புத்தெழுச்சியை வழங்கியிருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று 30 இலட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் தமிழர் நிலத்தின் தனித்துவமானதும் மாபெரும் அரசியல் அமைப்பாகவும் மாறியிருப்பது வரலாற்றுச் சிறப்புடைய செய்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில், மிகப்பெரிய கட்சிகளாகக் கருதப்படுகின்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளே தனித்துப் போட்டியிட முன்வருவதில்லை.
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி எவ்வித சமரசமும் இன்றி தனித்தே களம் கண்டுவருகின்றது.
இதன்படி, 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி, 4.59 இலட்சம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் பதிவான வாக்குகளில் 1.06 வீத மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.
இதற்கடுத்து, அடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 16.64 இலட்சம் வாக்குகளைப் பெற்றநிலையில் மக்கள் ஆதரவு 3.98 வீதமாக அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, நடந்துமுடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் என நான்கு கூட்டணிகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களமிறங்கியது.
யாரும் எதிர்பாராத அளவில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, மொத்தமாக 30 இலட்சத்து 43ஆயிரத்து 657 வாக்குகளைப் பெற்று மாநிலத்தில், மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.
இதேவேளை, சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட நிலையில் அவர், 48ஆயிரத்து, 597 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அத்துடன், அவரது கட்சியின் வேட்பாளர்கள், ஆவடி, சோழிங்கநல்லுார் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 18 தொகுதிகளில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் 106 தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி 172 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
எனவே, கட்சியை மக்கள் மயப்படுத்தும் முறையான கட்டமைப்பை அடுத்த ஐந்து வருடங்களில் ஏற்படுத்தினால், நாம் தமிழர் கட்சி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வரலாந்நு வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.