சோமாலிய தலைநகர் மொகாடிஷூவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வபேரி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் பொலிஸ்துறைத் தளபதி உட்பட 6 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று சோமாலிய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேஜர் சாதிக் ஏடன் அலி தூதிஷே தெரிவித்தார்.
இந்தநிலையில், இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அல் ஷபாபின் இராணுவ நடவடிக்கை செய்தித் தொடர்பாளர் அப்தியாசிஸ் அபு முசாப் நேற்று (திங்கட்கிழமை) கூறுகையில்,
‘பொலிஸ் தளபதிகளை கொல்வதே எங்கள் இலக்கு, வபேரி பொலிஸ் நிலைய தளபதி உட்பட ஐந்து பொலிஸை (பணியாளர்களை) நாங்கள் கொன்றோம்’ என கூறினார்.
சோமாலியாவின் சர்வதேச ஆதரவுடைய மத்திய அரசைத் தூக்கியெறிந்து இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விளக்கத்தின் அடிப்படையில் அதன் சொந்த ஆட்சியை நிறுவ 2008ஆம் ஆண்டில் இருந்து அல் ஷபாப் போராடி வருகின்றது.