சவுதி அரேபியாவுடன் முன்னெடுக்கப்பட்ட, நல்லுறவு பேச்சுவார்தையின் இறுதி முடிவுக்கு காத்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
‘ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவாரத்தைகளை வரவேற்கும். அந்த வகையில் இதனையும் வரவேற்கிறோம். ஈரான் கொள்கையில் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் சவுதியுடனான எங்களது பேச்சுவார்த்தைக்கான முடிவுகளுக்குக் காத்திருக்க வேண்டும்’ என கூறினார்.
சில நாட்களுக்கு முன்னர் ஈரான் – சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவைக் கொண்டிருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவன வளாகப்பகுதியில் உள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தின. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்நிலை நிலவியது.