இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்டுவரும் ரொக்கெட் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘ஜெருசலெமில் பாலஸ்தீனர்களின் வன்முறைக்கு பின்னர் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன பயங்கரவாதிகளால் இஸ்ரேல் மீது நடத்தப்படும் ரொக்கெட் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. இவை சண்டையை மேலும் தீவிரப்படுத்தலாம்’ என கூறினார்.
இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீன மக்களும் தாக்குதலை கைவிட்டு அமைதிகாக்கும்படி உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்வதற்கு பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்ரேல், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்தது.
இதனால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதல், கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர்.
இந்த போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை குறிவைத்து காசா முனை பகுதியில் ஆட்சி செய்துவரும் ஹமாஸ் அமைப்பினர் ரொக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் அமைந்துள்ள ஒருசில வீடுகளில் சிறு பாதிப்பு ஏற்பட்டபோதும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20பேர் உயிரிழந்தனர்.