கனடாவின் மக்கள் கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியருக்கு, சஸ்காட்செவனின் ரெஜினாவில் ஒரு சுதந்திரப் பேரணியை நடத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘சுதந்திரப் பேரணிகள்’ என்று விபரிக்கும் பல நிகழ்வுகள் இந்த வார இறுதியில் தெற்கு மற்றும் மத்திய சஸ்காட்செவன் முழுவதும் நடந்தன. அவற்றில் பங்கேற்றவர்கள் மாகாணத்தின் சமீபத்திய பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராக பேசியுள்ளனர்.
கொவிட்-19 கவலைகள் காரணமாகப் போராட்டங்களை இரத்துச் செய்யுமாறு சஸ்காட்செவன் அரசாங்கமும், பிராந்திய சுகாதார அமைச்சரும் பெர்னியரை வலியுறுத்தினர். இருப்பினும், பல ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன.
இந்தநிலையில் விக்டோரியா பூங்காவில் நடந்த சுதந்திரப் பேரணியில் பேசியதற்காக பெர்னியருக்கு 2,800 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்கள் கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர், இதை அநியாயம், நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று விபரித்தார்.
இந்த குறிப்பிட்ட நிகழ்வில் சுமார் 200பேர் கலந்து கொண்டனர். சஸ்காட்செவன் பொது சுகாதார ஆணையை மீறியதற்காக மொத்தம் 16பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.



















