நேபாளத்தில் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் உள்நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதனை சார்ந்து இயங்கிவருகின்ற நேபாளம் தற்போது மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், ஒக்சிஜன்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை நிலைவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 30 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள நேபாளம் உலகின் மிகக் குறைந்த வளர்ச்சிடைந்த நாடுகளில் ஒன்றாக திகழ்கின்றது.
பல ஆசிய நாடுகளை போலவே நேபாள அரசாங்கமும் கொவிட் தொற்றுக்கான முதலாவது அலையை சிறப்பாக கையாண்ட நிலையில், தற்போது இரண்டாது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், இதுவரை அங்கு நான்காயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.