அரபிக் கடலில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடப்பாண்டின் முதலாவது புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ எதிர்வரும் 14 ஆம் திகதி காலை தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இது வடக்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும். இலட்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் இலட்சத்தீவுகள், கடலோர கேரளா, கர்நாடகா, கோவா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழைவீழ்ச்சி ஏற்படும்.
அதேநேரம் எதிர்வரும் 16 ஆம் திகதி கிழக்கு மத்திய அரபிக் கடலில் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின் வடக்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும்.
குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கலாம். தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 14 ஆம் திகதிவரை மணிக்கு 50 கிலோமீற்றர் வரையில் சூறாவளி காற்று வீசும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.