2009 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கில் 228 பேர் கொல்லப்பட்ட விபத்தில் எயார் பிரான்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்ற 2019 ஆம் ஆண்டின் முடிவையும் இரத்து செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து எயார் பிரான்ஸ் மற்றும் எயார்பஸ் ஆகிய இரு நிறுவனங்களும் மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும் தற்போது அறிவிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு எந்த வகையிலும் விசாரணையின் முடிவுகளை பிரதிபலிக்காது என எயார்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்தோடு இந்த துயர விபத்தில் எந்தவொரு குற்றங்களையும் தாங்கள் செய்யவில்லை என்றும் எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரியோ டி ஜெனிரோவிலிருந்து பாரிஸுக்கு சென்ற AF447 என்ற எயார் பிரான்ஸ் விமானம் ஜூன் 1, 2009 அன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.