நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பயணத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் இரண்டு விதமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று வியாழக்கிழமை (13) இரவு 11.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை(17) அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆயினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லையென இராணுவத் தளபதி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
இதேநேரம், நேற்று நள்ளிரவு 11 மணிமுதல் மே மாதம் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாளாந்தம் இரவு 11.00 மணி தொடக்கம் அதிகாலை 04.00 மணி வரை பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தான முழுமையான விபரம்
- பொதுப்போக்குவரத்து சேவையில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி
- வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும்
- அமைச்சின் செயலாளரின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாகவே அரச நிறுவனங்களில் செயற்பாடு
- தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்கலாம்
- அவசியக் கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும்
- செயலமர்வுகள், மாநாடுகளுக்கு அனுமதியில்லை
- சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், கடைத் தொகுதிகள், சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானோருக்கே அனுமதி
- பேக்கரி, வீதியோரக் கடைகள், அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானோருக்கே உட்பிரவேச அனுமதி
- பராமரிப்பு நிலையங்கள், பாலர் வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன
- சுப காரியங்களையும் வைபவங்களையும் மறு அறிவித்தல் வரை நடத்தக்கூடாது
- வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர், வௌிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது கட்டாயம்