காசா நகரில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களும் அமைந்துள்ள கட்டடத் தொகுதி இஸ்ரேலிய விமானப்படையின் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது.
15 மாடிகள் கொண்ட குறித்த கட்டத் தொகுதியில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜசீரா ஆகிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் மற்றும் பல உள்ளூர் ஊடகங்கள், பல இணைய ஊடகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள், தனியார் குடியிருப்புகள் ஆகியன இருந்தன.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான போரின் ஆறாவது நாளான இன்று (சனிக்கிழமை) மக்கள் திரட்சிகொண்ட நகர மையப் பகுதியில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
மக்கள் வெளியேறுவதற்கு ஒரு மணிநேரம் அவகாசம் கொடுத்த பின்னர், வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவம், குறித்த கட்டடக் கோபுரத்தை முற்றாக அழித்துள்ளது.
எனினும், குறித்த கட்டம் அழிக்கப்பட்டமைக்கான சரியான காரணத்தை இஸ்ரேல் தெரிவிக்காத நிலையில், இந்தத் தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என சர்வதேச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டிடத்தின் உரிமையாளர் அபு ஹுஸாம், இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரியைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு, குறித்த கட்டடத்தில் உள்ள ஊடகக் பணியாளர்களுக்கு தங்கள், அலுவலகங்களில் இருந்து உபகரணங்களை வெளியேற்ற நேரம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது.
இதேனிடையே, குறித்த கட்டடத்தில் ஹமாஸின் உளவுத்துறை அலுவலகங்களுக்குச் சொந்தமான இராணுவச் சொத்துக்கள் இருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கட்டடத்தில் இருந்து, பொதுமக்கள் வெளியேற முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறப் போதுமான நேரம் வழங்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹமாஸ் இயக்கம், வேண்டுமென்றே காசா பகுதியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளின் மையத்தில் இராணுவத் தளங்களை வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.