கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 பொலிஸ் அதிகார பிரிவுகள் நேற்று இரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதேநேரம், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேலும் இரண்டு மாவட்டங்களின் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி கம்பஹா மாவட்டத்தின் கப்புகொட செபஸ்டியன் வீதியில் இருந்து தெபடிய வீதி வரையான பகுதியும் பிட்டிபன – லெல்லம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரொட்டே கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் நான்கு மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காலி மாவட்டத்தின் கொடஹெனா, தல்கஸ்கொட, இம்பலகொட மற்றும் கட்டுதம்பே ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டையின் சூரியவௌ நகரும் அம்பாறையின் பக்மீதெனிய, ரண்ஹெலகம மற்றும் சேறுபிட்டிய புறநகர் பகுதிகள் ஆகிய இடங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.
மேலும் பொலன்னறுவையின் சிரிகெத பகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதில் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.