தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினைத் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாக சிங்கள தேசத்தின் இனவழிப்பிற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகிக்கொண்டே வருகின்றது.
இதன் உச்சக்கட்டமாக 2006ஆம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2009ஆம் ஆண்டு அதியுச்சம் பெற்றது. இந்த இறுதி யுத்தத்தின்போது ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 679 பொது மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மறைந்த ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை புள்ளிவிபரங்கள் மூலம் ஆதாரபூர்வமாக நிறுவினார்.
இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதாயிரத்துக்கும் (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். மனிதகுல மாண்புகளின்றி குழந்தைகளைக்கூட பிடித்து சுட்டுக் கொன்றும், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகாம்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா.விடம் கையளித்தது.
ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர்.
மிகப்பெரும் மனித பேரவலத்துடனும் மனித உயிரிழப்புகளுடனும் யுத்தம் மெளனிக்கப்பட்டாலும் தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இவ்வாறு, நீண்ட நெடிய காலமாக இனவழிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் எமது இனத்திற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.
சிறுவர்கள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து எமது தேசத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாது தொடர்ந்தும் எமது மக்களை அடிமைகளாக ஒடுக்குவதிலேயே சிங்கள அரசு குறியாக உள்ளது.
உரிமை கேட்டு போராடிய எமது இனம் இன்று கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் நினைவேந்துவதற்கும் போராடவேண்டி உள்ளது.
தொடர்ச்சியாக எமது நிலங்களை தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் சிங்கள அரசானது, தமிழர் தேசத்தினை சிங்கள மயப்படுத்துவதிலேயே முனைப்புடன் செயற்படுகின்றது.
தமிழ் இனத்தின் இருப்பினை இத்தீவிலே கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கும் சிங்கள அரசானது மறுபுறத்தே திட்டமிட்ட முறையில் தமிழினம் தமது அரசியல் அபிலாசைகள், அரசியல் தீர்வு நோக்கிச் சிந்திக்காத வண்ணம் தமிழர் தேசம் எங்கும் பிரச்சினைகளையும் கவனச் சிதறல்களையும் உருவாக்கிக்கொண்டே உள்ளது.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதப் பேரவலம், தமிழினத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ, முடிவுவோ அல்ல. நீண்ட தொடரான இனவழிப்பின் ஓர் அங்கமே. இத்தொடரான இனவழிப்பிலிருந்து எமது இனத்தைப் பாதுகாக்க சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலம் நீதி வழங்கப்படுவதுடன், மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்ய சர்வதேசத்தினால் நடத்திக் கண்காணிக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும்.
இதற்கான ஆரம்ப புள்ளியாகவே தமிழ் மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) விசாரணையை வலியுறுத்தித் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
தமிழினத்தின் விடுதலைக்கான திறவுகோல் முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்தே மீண்டெழும் எனும் பொதுத் தளத்தில் ஒன்றிணைத்து பயணிக்க தமிழினம் இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழினத்தின் மீதான இனவழிப்பை நினைவேந்தும் இந்நாளில், அநியாயமாகக் கொல்லப்பட்ட எமது உறவுகள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கங்களைச் செலுத்துகின்றோம்.
கொல்லப்பட்ட உறவுகளை நினைவேந்தும் விதமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் பொதுக் கட்டமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள் காலை 10.30 இற்கு இடம்பெறவுள்ளன. இதில் கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
அத்துடன், தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினால் மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் ஆயர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மே-18 மாலை ஆறு மணிக்கு மணியோசையின் பின்னர் அகவணக்கம் செலுத்தி, வீடுகளின் முன்பு விளக்கேற்றி எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்பினை நினைவுகூருவதுடன் அந்நாளில் காலை உணவினைத் தவிர்த்து, மதிய வேளையில் உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்கள் வீடுகளில் பரிமாறி எமது துயரங்களையும், வடுக்களையும், நினைவுகளையும், வரலாறுகளையும் அடுத்த சந்ததிக்கு தமிழினம் தனது இலக்கை அடையும் வரை கடத்துமாறு அனைவரையும் வேண்டி நிற்கின்றோம்.
வரலாறே எமது வழிகாட்டியாக உள்ளதால் எமது இனத்தின் வரலாற்றினை இளைய சந்ததிக்குக் கடத்துவதினை இனத்திற்குரிய கடமையாக நாம் ஒவ்வொருவரும் தவறாது நிறைவேற்றுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.