நாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஏனெனில் தற்காலிக தங்குமிடங்களில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் கொடிபிலி இந்த திடீர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு கொரோனா நோயாளிகூட அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
48,000 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 121,177 பேர் மே 16 வரை தற்காலிக தங்குமிடங்களில் இருந்தனர் என்றும் ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் நேற்றைய நிலைவரப்படி அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தரவுகளின்படி மூன்று வீடுகள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன என்றும் 868 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், அனைத்து முக்கிய நதிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.