கொரோனா பரிசோதனை அளவை அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சென்னையில் 12 ஆம் திகதி முதல் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருகிறது.
சென்னையில் கொரோனா தொற்று விகிதமும் 23 சதவீதத்தில் இருந்து குறைந்து 20 சதவீதத்திற்கு கீழ் வந்திருப்பது நிம்மதி அளிக்கிறது.
ஆஸ்திரியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில், அதிகளவில் சோதனைகள் செய்ததால், கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது. அதிக தடுப்பூசிகள் செலுத்தியதன் பயனாகவே புதிய தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க முடிந்தது.
அதேபோல தமிழகத்திலும் சோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதன் வாயிலாக கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் மூன்று இலட்சமாக அதிகரித்து கொரோனா பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.