குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்ற குழு அறை 02 இல் நேற்று இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனை குழுவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையான கட்டளை 112இன் விதிகளின்படி குழுவிற்கு அறிவிக்கப்படும் விடயங்கள் குறித்து விவாதிக்கும்போதே பிரதமர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்.
இதன்போது காணி அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டமூலத்தின் திருத்த சட்டமூலம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவின் ஆலோசனை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
காலி மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களின் தோட்டங்களை அண்மித்து காணப்படும் குடிசை வீடுகள் தொடர்பில் வெளிப்படுத்தி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அப்பகுதிகளுக்கு வீட்டுத் திட்டங்களை திட்டமிடுமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.