உக்ரைனில் தடுப்பூசி நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பதாகக் கூறி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மேக்சிம் ஸ்டெபானோவ் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவிக்கான பொருத்தமான நபரை உக்ரைன் நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.
பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் மேக்சிம் ஸ்டெபானோவ் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனாவை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டு மக்களுக்கான சிறப்பான சுகாதாரத் திட்டமும் தயாரித்திருந்தேன். இந்த ஆண்டிலேயே நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கும்’ என கூறினார்.
மொத்தம் 4.1 கோடி மக்கள்தொகை கொண்ட உக்ரைனில் இதுவரை 9,48,330 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 23 லட்சம் தவணைகள் தடுப்பூசியே உக்ரைனுக்கு வந்துள்ளது.