கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளமையால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சி.யமுனாநந்தா மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் 20 தொடக்கம் 60 வயது வரையானோரே அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த தொற்றினால் பாதிக்கப்படுவோரில் 10 வீதமானோர் சுவாசிப்பதற்குச் சிரமங்களை எதிர்நோக்கின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இத்தகையவர்களுக்கு விசேட மருத்துவப் பராமரிப்பும் பிராணவாயு சிகிச்சையும் மிகவும் அவசியமாகும்.
மேலும் கொரோனா நோயாளி ஒருவரிலிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்பு உள்ளது. ஆகவே வைரஸ் தொற்றுத் தொடர்பாக அலட்சியப் போக்கினை கடைப்பிடிக்க கூடாது.
அந்தவகையில் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு இரட்டை முகக்கவசம் அணிதல் மிகவும் அவசியம் என்பதுடன் 100 வீதம் தனிநபரும் அவர் சார்ந்த சமூகமும் விடுதலை அடைவதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், கைகளை அடிக்கடி கழுவுதல், பயணங்களைத் தவிர்தல், சனத்திரள்மிக்க இடங்களைத் தவிர்த்தல், ஒன்றுகூடலைத் தவிர்த்தல், தூய்மி பாவித்தல், போசாக்குள்ள உணவுகளை உண்ணல், தடுப்பு மருந்து ஏற்றுதல், குளிரூட்டப்பட்ட இடங்களைத் தவிர்த்தல் ஆகிய 10 முறைகளைக் கடைப்பிடித்தால் தொற்று ஏற்படுவதனை எம்மால் தவிர்க்க முடியும்.
இதேவேளை தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், உடனடியாக 12 நாட்கள், வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டால் ஏனையோருக்கு தொற்று ஏற்படாது.
மேலும் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கு போதிய இடவசதிகள் இல்லை. எனவே இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு 2 கிழமைகள் சுய தனிமைப்படுத்தலை ஒவ்வொரு குடும்பமும் மேற்கொள்வார்களாயின் தொற்று பரவல் குறையும்.
தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு முற்காப்பு வழிகளே மிகச்சிறந்தவை ஆகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.