கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரகாலத்திற்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி ஊடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டமொன்றினை நடத்தினார்.
இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, ”முழு ஊரடங்கு நடைமுறையிலுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு காய்கறி, பால் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் கொரோனா நிவாரணத் தொகை, பயனாளிகளுக்குச் சென்று சேர்ந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியர்களது முக்கிய கடமையாகும்.
மேலும் ஊரடங்கு காலப்பகுதியிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி, தொய்வின்றி இடம்பெற வேண்டும் என்பதுடன் இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு என்பதை புரிந்துக்கொண்டு குறித்த செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.