கொரோனா தொற்று பரவல் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்கு உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்ட 10 வைத்தியர்களின் மூவர் மட்டுமே முடிவுகளை எடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் கொரோனா தொற்று தொடர்பான உத்தியோகப்பூர்வ தரவுகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் இப்போது வரை தங்கள் வேலையைச் செய்வதாகத் தெரியவில்லை என்றும் அச்சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.
கொரோனா தொற்று தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களால் எடுக்கப்பட வேண்டும் என அந்த மூன்று வைத்தியர்களிடமும் ஒரு அணுகுமுறை காணப்படுவதாகவும் அவர்கள் மற்ற மருத்துவர்களுடன் இணக்கமாக வேலை செய்வதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முறைப்பாட்டை வழங்கியுள்ள அதேவேளை 14 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் உத்தியோகபூர்வ முடிவை தொற்றுநோயியல் பிரிவு எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு தொற்றுநோயியல் பிரிவு இந்த அளவிலான தரவுகளை சமர்ப்பிக்கத் தவறியமை சுகாதார அமைச்சின் குறைபாடு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.