மட்டக்களப்பு- கோவில்குளத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமைகள் தொடர்பாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு சுகாதார பிரிவில் நேற்றைய தினம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று காத்தான்குடி சுகாதார பிரிவில் 6 பேருக்கும் செங்கலடி சுகாதார பிரிவில் 4 பேருக்கும் பட்டிப்பளையில் 2 பேருக்கும் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில்11 பேருக்கும் ஏறாவூர் சுகாதார பிரிவில் 5 பேருக்கும் ஆரையம்பதியில் மூவருக்கும் கிரான் சுகாதார பிரிவில் 2 பேருக்கும் வவுணதீவு, ஓட்டமாவடி, வாழைச்சேனை சுகாதார பிரிவுகளில் தலா ஒருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், மூன்று மாத கர்ப்பிணியொருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் காத்தான்குடியை சேர்ந்த (68 வயது) பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மட்டு.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.