மாநில அரசுகள் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும் என மத்திய அரசு கூறியிருப்பது சுயநலமான முடிவு என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகள் தடுப்பூசிகளை நேரடியாக கொள்வனவு செய்வது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.சிதம்பரம் மேற்படி கூறியுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘மத்திய அரசுடன் மாத்திரமே விற்பனை ஒப்பந்தம் செய்வோம் என பைஸர், மொடர்னா நிறுவனங்கள் கூறியதில் ஏதேனும் வியப்பு இருக்கிறதா?
மாநிலங்கள் நேரடியாக வெளிநாட்டு மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருப்பது சுயநலமிக்க முடிவு.
இந்தியாவில் பைஸர், மொடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு இன்னும் அனுமதியளிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை அந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும்.
தடுப்பூசி கொள்முதலை பரவலாக்க நாங்கள் கூறும் அறிவுறைகளையும், நீதிமன்றங்கள் கூறிய ஆலோசனைகளையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது.
மோடி அரசு இறக்கமற்றதாகவும், கொடூரமாகவும் இருக்கிறது.
தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். என்ன துயரம்’ எனப் பதிவிட்டுள்ளார்.