மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
கோட்டை பூங்கா பகுதியானது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் மரங்கள் வளர்க்கப்பட்டு இயற்கை அழகு பொருந்திய பகுதியாக மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு குறித்த பகுதியின் இயற்கை அழகு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு மரம் நடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் வருகைதந்து குறித்த பகுதியை பார்வையிட்டனர்.
இதன்போது இளைஞர்களுடன் கலந்துரையாடிய மாநகர முதல்வர் சரவணபவன் மற்றும் இரா.சாணக்கியன் குறித்த பகுதியில் மாநகரசபையின் அனுமதியின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையினால் மரம்வெட்டுவதற்கு அனுமதிப்பதில்லையென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறிய வகையில் மாநகரசபையின் ஆணையாளரினால் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் குறிப்பிட்டார்.
இதேநேரம் குறித்த பகுதியிலுள்ள இயற்கை தோனா பகுதியையும் மூடுவதற்கான நடவடிக்கையினை மாநகரசபை முன்னெடுத்துள்ளதாகவும் கழிவு குப்பைகளை கொட்டி அவற்றினை மூடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவற்றினையும் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் இளைஞர்கள் இங்கு கோரிக்கை முன்வைத்தனர்.
தாமும் குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிக்கு வருகைதந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளவை தொடர்பில் அவதானித்ததாக இரா.சாணக்கியன் தெரிவித்தார்.