கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிப்புரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஊரகப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்து விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரியவரும்.
தமிழகத்தில் ஒக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன.
தமிழகத்தில் தற்போது 3.14 இலட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பு உள்ளன. தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளோம்.
ஒக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.