திருகோணமலை- இறக்கக்கண்டி பகுதியில் வெடி மருந்துகளை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 39 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு, இறக்கக்கண்டி பகுதியில் வெடி மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தகவலுக்கமைய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது மறைத்து வைத்திருந்த வெடி மருந்துகளை அவர்கள் மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த வெடிமருந்துகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.