“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது தவறு, கொவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்“
இவ்வாறு தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்திருப்பவர் இமேஷ் ரணசிங்க என்ற ஊடகவியலாளர்.
ஒரு பெரும் தொற்றுநோயைச் சாட்டாக வைத்து மையத்தில் அதிகாரங்களைக் குவித்துக்கொண்ட மிகச்சில நாடுகளில் இலங்கை தீவும் ஒன்று. ஒரு பெரும் தொற்று நோயைச் சாட்டாக வைத்து ராஜபக்ஷக்கள் நாட்டை அதிகரித்த அளவில் இராணுவமயப் படுத்தியிருக்கிறார்கள்.
ஆறுக்கும் குறையாத சிவில் அமைச்சுக்ககளின் செயலாளர்களாக ஓய்வுபெற்ற படைப் பிரதானிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், கொவிட்-19ஐ முறியடிப்பதற்காக உருவாக்கப்பட்ட விசேட செயலணியின் தலைவராக படைத் தளபதியே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவைதவிர, பெருந்தொற்றுக் காலத்தில் நிர்வாகத்தைக் கெட்டித்தனமாக வழிநடத்துவதற்கு என்று எல்லா மாவட்டங்களுக்கும் இணைப்பாளர்களாக படைத் தளபதிகளே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம் போன்றவற்றுக்கு இரண்டு ஓய்வுபெற்ற படைப் பிரதானிகள் நியமிக்கபட்டிருகிறார்கள். அதாவது, நிலைமாறுகால நீதிக்கான இரண்டு அலுவலகங்களுக்கு இரண்டு முன்னாள் படைப் பிரதானிகள்?
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் முடக்கம் நீக்கப்பட்டது. இதன்போது, யாழ். நகரை நோக்கிச் செல்லும் எல்லா வழிகளிலும் படைத்தரப்பே போக்குவரத்துப் பொலிஸாரின் வேலைகளைச் செய்தது. நகரத்தை நோக்கிச் செல்லும் எல்லா வழிகளிலும் படையினர் நின்று மக்களை சுற்றுப்பாதைகளால் திசை திருப்பினார்கள். இதன்மூலம், நகரத்துக்குள் நுழையும் ஆட்களின் தொகையைக் குறைப்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது.
அதுபோலவே, முடக்க நாட்களிலும் பெருமளவுக்கு வீதிப் போக்குவரத்து உட்பட பெரும்பாலான தொடர்புடைய வேலைகளில் படைத் தரப்பினரே ஈடுபடுகிறார்கள். மேலும், பெரும்பாலான ஊடகங்களில் மருத்துவர்களோடு இணையாக படைப் பிரதானிகளும் பேச்சாளர்களாகக் காணப்படுகிறார்கள். சில சமயங்களில் மருத்துவர்களைப் பின்தள்ளிவிட்டு படைத்தரப்பு அதிகம் கருத்துத் தெரிவிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, முடக்கம் பற்றிய அறிவிப்புகளிலும் ஒருவித படை ஒழுக்கம்தான் பின்பற்றப்படுகிறது. சிவில் ஒழுக்கம் பின்பற்றப்படுவதில்லை. எத்தனை நாட்கள் முடக்கம் என்பதனை முன்கூட்டியே திட்டவட்டமாக சிவில்தனமாக, வெளிப்படையாக அறிவிக்காமல் முடக்க நாட்கள் முடிவடையும் நேரத்தில் அது மேலும் நீடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இதனால், அதிகம் பாதிக்கப்படுவது அன்றாடம் காய்ச்சிகள் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கமும்தான். ஏனெனில், ஒன்லைன் மூலம் பொருட்களை விநியோகிக்கும் கட்டமைப்பு பெரிய நகரங்களுக்கு வெளியே பலமாக இல்லை.
இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் போது ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. இலங்கை தீவு ஒரு பெரும் தொற்றுநோய் சூழலுக்குள் பெரியளவில் அடிமைப்பட்டுவிட்டது. ஒரு வைரசை, போரைப் போலவே அது எதிர்கொள்கிறது. ஆனால், படைத் தரப்பை முன்னிறுத்தி கொவிட்-19ஐ எதிர்கொண்டாலும் அதில், அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றிகளைப் பெறவில்லை என்பதுதான். அதைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் சுட்டிக்காட்டுகிறார்.
இன்னும் எத்தனை கொவிட்-19 அலைகள் காத்திருக்கின்றனவோ தெரியாது. ஒவ்வொரு அலையும் முன்னையதைவிட ஆபத்தானதாகக் காணப்படுகிறது. இம்முறை இலங்கை தீவு ஒப்பீட்டளவில் அதிகரித்த நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும், ஒரு தீவாக இருப்பது இலங்கை வாழ் மக்களுக்கு இது விடயத்தில் அதிர்ஷ்டமானது. தீவின் வாசல்களை மூடிவிட்டால் வெளியிலிருந்து வரும் நோய்க் காவிகள் வருதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும்.
எனினும், நோய்த் தொற்றைக் கண்டுபிடிப்பதற்குப் பெருமளவுக்கு போதிய வளங்கள் இல்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. பல சமயங்களில் இறந்த பின்னரே நோயாளிகளுக்குத் தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
அண்மையில், கிளிநொச்சியில் 15 வயதான ஒரு சிறுமி தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்த பின்னர் அவருடைய உடலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படித்தான் பல முதியவர்களும் இறந்த பின்னரே தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. அப்படியென்றால் சோதிக்கபடாத வரைதான் ஒருவர் சுகதேகியா?
ஆனால், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள், இலங்கை தீவு அப்படித்தான் செய்து வருகிறது என்று. ஆனால், அது செலவு அதிகமான ஒரு முயற்சி என்றும் வளமிக்க மேற்கு நாடுகளில்கூட அது பொருத்தமான வெற்றிகளைத் தரவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். நோய்ப் பரவல் சங்கிலியை உடைப்பதுதான் வெற்றிகரமான ஒரே நடைமுறை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், மேல் மாகாணத்தில் சுமார் ஆறு இலட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் முதற்கட்டமாகப் போடப்பட்டன. ஆனால், இன்னும் 10 நாட்களில் இரண்டாவது தடுப்பூசிக்கான காலகட்டம் வரப்போகின்றது. இரண்டாவது தடுப்பூசி இன்றுவரையிலும் போடப்படவில்லை.
சமூகத்தின் பலமான நிலைகளில் இருப்பவர்களுக்கு அது எப்படியோ கிடைக்கிறது. ஆனால், சாதாரண சனங்களின் நிலை என்ன?
இந்த வாரம் சீனா வழங்கியது மொத்தம் ஐந்து இலட்சம் தடுப்பூசிகள். ஆனால், மேல் மாகாணத்தில் மட்டும் ஆறு இலட்சம் பேருக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். எனவே, தடுப்பூசிகளின் விடயத்திலும் அரசாங்கம் திருப்தியாகச் செயற்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
நாடு ஒரு தீவாக இருப்பதனால் தொற்றுக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. அதோடு, படைத் தரப்பை நோய்த் தொற்றுக்கு எதிராக சேவையில் ஈடுபடுத்தும் பொழுது அது அதிகம் வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்பதும் உண்மை. ஏனெனில், இலங்கை தீவின் படைத்தரப்பு எனப்படுவது பாகிஸ்தானைப் போலவே முதற் தெரிவான தலைப்பேறான அனைத்தையும் கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு கட்டமைப்பு ஆகும்.
வெல்லக் கடினமான ஒரு ஆயுதப் போராட்ட அமைப்போடு மோதிய காரணத்தால் அதிக வளங்கள் கொடுக்கப்பட்டு, அதிகம் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. இலங்கை தீவில் உள்ள அரசு உபகரணங்களில் அதிக ஆள் அணியும் வினைத்திறன் மிக்க கட்டமைப்போடும் வளங்களோடும் காணப்படும் ஓர் அரசு உபகரணம் படைத்தரப்புத்தான்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, இலங்கை தீவில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகவும் படைத்தரப்பு அண்மைய தசாப்தங்களில் எழுச்சி பெற்றுவிட்டது.
இதுதவிர, பொதுவாக உலகில் அனர்த்த காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் படைத்தரப்பே களத்தில் இறக்கப்படுகிறது. எனவே, படைத்தரப்பைக் களத்தில் இறக்கியது தவிர்க்க முடியாதது. ஆனால், இங்கு இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்,
முதலாவது, ஒரு பெரும் தொற்று நோயைக் காரணமாகக் காட்டி எல்லாவற்றையுமே படைமயப்ப்படுத்துவதுதான் இங்கு பிரச்சினை.
இரண்டாவது, உலகில் கொவிட்-19ஐ வெற்றிகரமாகக் கையாண்ட நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் சீனா போன்ற சில நாடுகளைத் தவிர பெரும்பாலானவை உலகின் வெற்றிபெற்ற ஜனநாயக நாடுகள் ஆகும்.
அங்கெல்லாம் படையினரை முன்னிறுத்தித்தான் வைரஸ் வெற்றி கொள்ளப்பட்டது என்பதல்ல. அல்லது வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு படை நடவடிக்கைகளைப் போல முன்னெடுக்கப்பட்டன என்பதல்ல. சுமார் நான்கு தசாப்தகால போர் காரணமாக இலங்கை தீவில் படைத்தரப்பு அபரிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. அதை ஒரு வளமாகப் பயன்படுத்தி கொவிட்-19ஐ எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. ஆனால், அதை வைத்து எல்லா சிவில் நடவடிக்கைகளையும் படைமயப்படுத்துவதே இங்கு பிரச்சினையாக வருகிறது.
இவ்வாறாக, கொவிட்-19ஐ எதிர்கொள்வதில் அரசாங்கம் போதியளவு வெற்றிபெற முடியவில்லை என்பதை வைத்து ராஜபக்ஷ சகோதரர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக சில ஊகங்கள் நிலவுகின்றன. குறிப்பாக, பசில் ராஜபக்ஷ திடீரென்று அமெரிக்கா பயணமாகியது. அடுத்ததாக, அண்மையில் நடந்த வெசாக் வழிபாட்டில் மகிந்த ராஜபக்ஷ கண்கலங்கியதாக வந்த ஒரு தகவல் போன்றவற்றைத் தொகுத்து மேற்கண்டவாறு ஊகிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்ஷ ஏன் அமெரிக்காவுக்குப் போனார் என்பதற்கு உத்தியோகபூர்வமாக சில விளக்கங்கள் கூறப்பட்டாலும் மேற்கண்ட ஊகங்களை நம்புபவர்கள் இந்த விளக்கங்களை நம்புவதாகத் தெரியவில்லை. அதேசமயம், அண்மையில் வெசாக் வழிபாட்டின்போது அந்த வழிபாட்டை நடத்திய தேரர் ஒருவர் ஆற்றிய உரை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
அந்த உரையில் மேற்படி தேரர், மஹிந்த ராஜபக்ஷ யுத்த காலங்களில் எப்படி துணிச்சலாகவும் உடனடியாகவும் செயற்பட்டார் என்பதனை உதாரணங்களோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். போர் ஆபத்துக்களின் மத்தியிலும் மஹிந்த ராஜபக்ஷ எப்படி உடனடியாக களத்தில் இறங்குவார் என்பதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர். போரைப் போலவே பெரும் தொற்றுநோயும் ஒரு சவால் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
போரை எதிர்கொண்டபோது மஹிந்த ராஜபக்ஷ நாட்டை வழிநடத்தியதை ஒரு முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டிய தேரர், இப்போதுள்ள நிலைமைகளோடு அதை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். தேரரின் உரையைக் கேட்டு பிரதமர் மஹிந்த கண்கலங்கியதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.
மஹிந்த ஏன் அழுதார் என்பதற்கு வியாக்கியானம் வழங்குவது இக்கட்டுரையின் நோக்கமன்று. ஆனால், பசில் திடீரென்று அமெரிக்கா போனது, மஹிந்த கண்கலங்கியது போன்றவற்றைத் தொகுத்து சகோதரர்களுக்கு இடையில் ஏதோ முரண்பாடு உண்டு என்ற முடிவுக்கு வருவது சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றே தோன்றுகிறது.
பொதுவாக, கொழும்பில் சிங்கள ஊடகங்களில் ஒரு பகுதியினர் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான தரப்பினர் மத்தியிலும் அவ்வாறான ஊகங்கள் அடிக்கடி மேலெழக் காணலாம். ஆனால், இது ஒரு பகுதி சிங்கள மற்றும் தமிழ் மக்களின் விருப்பமா அல்லது கற்பனையா அல்லது உண்மையான கொழும்பு யதார்த்தமா என்ற கேள்வி இங்கு முக்கியம்.
கொழும்பில் ஆளும் குடும்பத்துக்குள் ஏதோ முரண்பாடுகள் இருப்பதாக அடிக்கடி நினைத்துக் கொள்வதும் அதை வைத்து அடுத்தக்கட்டம் என்ன நடக்கலாம் என்று கற்பனை செய்வதும் இப்பொழுது ஒரு போக்காக வளர்கிறது.
ஆனால், ராஜபக்ஷக்களின் பலங்கள் இரண்டு. முதலாவது போர் வெற்றி. இரண்டாவது ஒரு குடும்பமாக அந்த வெற்றியை வசப்படுத்தி வைத்திருப்பது. இந்த இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. போர் வெற்றிகள்தான் அந்த குடும்பத்துக்கான நீண்ட பல ஆண்டுகளுக்கான அரசியல் முதலீடு. எனவே, இரண்டையும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாது.
கடந்த ஆண்டுகளில் அவர்கள் அந்த வெற்றியின் பங்காளிகளில் ஒருவரான சரத் பொன்சேகாவை வெற்றிகரமாக அந்த வெற்றியில் இருந்து பிரித்து எடுத்துவிட்டார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னிருந்து இதுபோன்ற ஊகங்கள் அடிக்கடி மேலெழுகின்றன.
இவை, அநேகமாக சிங்கள மற்றும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் ஊகங்கள் அல்லது விருப்பங்கள் அல்லது கற்பனைகள் என்பதைத்தவிர உண்மைகள் அல்ல என்பதைத்தான் கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் நிரூபித்திருக்கிறது.
கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்