கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவே, ஈரோடு விருந்தினர் மாளிகையை வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் கோவை மாவட்டத்தில் முதலில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர், அங்கு முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்களின் செயற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தனது ஆய்வு நடவடிக்கையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் தவிர ஏனையவர்கள் வருகை தர வேண்டாமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.