சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார்.
ஒரு தடுப்பூசி 15 டொலர் என்ற அடிப்படையில் 210 மில்லியன் டொலர் செலவில் 14 மில்லியன் டோஸ் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், பங்களாதேஷினால் ஒரு தடுப்பூசி 10 டொலர் அல்லது 5 டொலர் குறைவாக இதேபோன்ற அளவை அதாவது 14 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்க முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு ஏன் விலை வேறுபாடு இருக்கிறது என கேள்வி எழுப்பிய எஸ்.எம். மரிக்கார், இதன் விளைவாக இலங்கை 70 மில்லியன் டொலர் மேலதிகமாக செலுத்துவதாகவும் இது பிணைமுறி மோசடி சம்பந்தப்பட்ட தொகையை விட அதிகம் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் ராஜபக்சர்கள் சீனாவுடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்றபோதும் அதிக கட்டணம் செலுத்துவது என்பது சமமான விலை அல்லது மலிவான பேச்சுவார்த்தை நடத்த இயலாமையை பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.