யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறப்பு ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 3ஆம், 4ஆம் திகதிகளில், பல்கலைக்கழகத்திலுள்ள சுமார் 1,600 பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதாவது நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருவதற்காக, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குமாறு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அண்மையில் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
இதற்கிடையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் நேற்று கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்தே ஜனாதிபதி, யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய எதிர்வரும் 3ஆம் 4ஆம் திகதிகளில் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.