வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ரக போர் கப்பல்கள், பீரங்கி என்ஜின், ரேடார்கள் உள்ளிட்ட 108 இராணுவ தளவாடங்களுக்கான இரண்டாவது இறக்குமதி தடை பட்டியலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதை ஊக்குவித்து, இந்தியா தற்சார்பு நிலையை அடைய உதவும் என்பதோடு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும்.
இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள இந்த 108 உபகரணங்களுக்கு இணையான சாதனங்கள் இனி பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் 2020 இன் கீழ் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதன் முறையாக பாதுகாப்பு துறை சார்ந்த 101 உபகரணங்கள் இறக்குமதிக்கான தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது 108 உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.