வியட்நாமில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் அம்சங்களின் கலவையாக உள்ள இந்த புதிய மாறுபாட்டினால், பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் நோக்குடன் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஹோ ச்சீ மின் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்துவ மிஷனில் மட்டும் 125க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், அந்த இடத்தை முழுமையாக அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.
இது தவிர மே 31ஆம் முதல் 15 நாட்களுக்கு வியட்நாமில் புதிய சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி கடைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்படும். பொது இடங்களில் 10 பேர் கூட விதிக்கப்பட்ட தடை, ஐந்து பேராக கட்டுப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
வியட்நாமில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், இதுவரை 7,432பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை அங்கு பத்து லட்சம் பேரில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.