தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார்.
யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது.
இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.பொது நூலகம் 1981 ஜூன் 1 ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டது. இதில் தமிழர்களின் பண்டைய வரலாற்றை ஆதரிக்கும் பல பழங்கால புத்தகங்கள் எரிந்துவிட்டன. இந்த செயற்பாடு இனப்படுகொலைக்கு ஒப்பானதாகும்.
இவ்வாறு யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டு கடந்துள்ளது. ஆனாலும் இன்னும் கூட இனப்படுகொலை நடவடிக்கைகளில் இருந்து தமிழர்களுக்கு உதவ அமெரிக்காவையும் இந்தியாவையும் அழைக்க எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள்.
இவர்கள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமைகள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும். சாவகச்சேரி மற்றும் பிற மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீன ஆக்கிரமிப்பை தமிழ் அரசியல்வாதிகள் எதிர்க்கவில்லை. இவ்விடயத்திலும் அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள்.
தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கும்போது சீனர்களை விரட்ட அமெரிக்கா மற்றும் நேட்டோ போன்ற சக்திவாய்ந்த நாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் அழைக்க தவறிவிட்டனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
















