இலங்கை அரசின் நடவடிக்கையால் சீனாவின் மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை அரசு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும், 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் சீனாவுக்கு தாரைவார்த்துள்ளது.
இதன் வாயிலாக பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழகத்தின் பாதுகாப்புக்கு இதுவரை இல்லாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தெற்கில் ஹம்பாந்தோட்டையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளை சீனா கண்காணிக்கிறது.
இலங்கையின் வடக்கில், தமிழகத்தின் ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனைலை தீவு, நயினாதீவு போன்ற தீவுகளை காற்றாலை மின்சாரம் தயாரிக்க, தனியார் நிறுவனங்கள் வாயிலாக பெற்றிருக்கிறது.
கிட்டத்தட்ட தென் மாநிலங்களை சீனா சுற்றிவளைத்துள்ளது. எனவே இலங்கையில் இருந்து சீனா வாயிலாக, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தவறான வெளியுறவுக் கொள்கையே காரணம். எனவே இலங்கையை பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடரக் கூடாது. சீனாவின் நண்பன் என்ற கோணத்தில் தான் இலங்கையை பார்க்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.