கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு கரைச்சி பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், அடைத் தொழிற்சாலை நிர்வாகம் இதற்கு ஒத்துழைக்காவிடின் நீதிமன்ற்ததை நாடவும் சபை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் நிலையில், கொரோனா பரவும் அச்சநிலை காரணமாக தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்குச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச சபையின் உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கமைவாக, குறித்த ஆடைத் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு பிரதேச சபைகள் சட்டத்தின் 281.4ஆம் இலக்க சரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என தவிசாளர் தெரிவித்தார்.
அத்துடன், தொற்று நோய் ஒன்று பரவும் சந்தர்ப்பத்தில் குறித்த சட்ட விதிகளைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதற்கு சபையின் பூரண அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்றும் தவிசாளர் சபையிடம் முன்வைத்திருந்தார்.
இதற்கமைவாக இன்றைய அமர்வில் குறித்த சட்டத்தைப் பயன்படுத்தி ஆடைத் தொழிற்சாலைகள் இரண்டையும் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் சபையில் தீர்மானத்தை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.