இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வெற்றி- தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
லோட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது நியூஸிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவோன் கோன்வே 200 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஒல்லி ரொபின்சன் 4 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொறி பர்ன்ஸ் 132 ஓட்டங்களையும் ஜோ ரூட் மற்றும் ஒல்லி ரொபின்சன் ஆகியோர் தலா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 6 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீசன் 3 விக்கெட்டுகளையும் நெய்ல் வாக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 103 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 273 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் 36 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஒல்லி ரொபின்சன் 3 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
273 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, போட்டியின் இறுதிநாள் வரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை பெய்ததால், அன்றைய ஆட்டம் இரத்து செய்யப்பட்டது. இதுவே இப்போட்டி சமநிலையாவதற்கு முக்கிய காரணமாகும்.
இதன்போது டொமினிக் சிப்ளி ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களையும் ஜோ ரூட் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய டேவோன் கோன்வே தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.