லட்சத்தீவில் பிறப்பிக்கப்படுகின்ற புதிய உத்தரவுகள் மனவேதனை அளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 93 ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்தில், ‘ நாங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை. நடுநிலைமை மற்றும் அரசியலபைபின் உறுதிப்பாடு மீது நம்பிக்கை வைத்துள்ளோம். லட்சத்தீவுகளின் புதிய வரைவு சட்டங்கள், தீவுக்கும் அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானதாக உள்ளது.
மக்கள் கருத்துக்களை கேட்காமல், புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் அனைத்தும் அன்னிய தன்மையுடனும், தன்னிச்சையான கொள்கை முடிவுகள் உடையதாகவும், உள்ளன.
எனவே இந்த புதிய வரைவு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மக்களின் நலனில் அக்கறை உடைய முழுநேர நிர்வாகி நியமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவு வரலாற்று ரீதியாக கேரளாவுடன் அதிக தொடர்புடையது. இந்த தீவிற்கு பொறுப்பாக மத்திய அரசு நிர்வாகியான பிரபுல் படேல், கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் இவர் பிறப்பித்த உத்தரவுகளும், சட்டவரைபும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.