தடுப்பூசி குறித்த முக்கியமான தகவல்களை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகர் பிரதீப் ஹல்தார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தடுப்பூசிகளின் இருப்பு அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது.
ஐ.நா மேம்பாட்டு திட்டத்தின் ஆதரவுடன் சர்வதேச தடுப்பூசி திட்டத்தின் கீழ் மின்னணு அமைப்பை மத்திய அரசு பராமரித்து வருகிறது.
மத்திய அரசுக்கு சொந்தமான குறித்த மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விபரங்களை மாநில அரசுகள் தினசரி அடிப்படையில் பதிவேற்றம் செய்து வருகின்றன.
அதில் பதிவு செய்யப்பட்டு வருகின்ற தகவல்கள் மிகவும் முக்கியமானவை. தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே அந்த மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இன்றி எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.