இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன் செயற்படும் ஜெர்மனி அரசுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்திய – பசுபிக் பிராந்தியத்துக்கான வழிகாட்டு விதிகளை இரண்டாவது ஐரோப்பிய நாடாக ஜெர்மனி கடந்த ஆண்டு வெளியிட்டது. அதை இந்தியா வரவேற்றது.
இந்தியா, ஜெர்மனி இடையே அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. உயர்கல்வி, தொழில் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே மாணவர்கள், தொழில் நிபுணர்கள் பரிமாற்றம் நடைபெறுவது வரவேற்கத்தக்கது.
கொரோனா காலத்துக்குப் பிறகு அனைத்து நாடுகளுக்கும் ஏற்கக் கூடிய சர்வதேச விதிகளை உருவாக்குவதற்கு ஒத்த கருத்துடைய நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.