நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி 7 மாநாட்டில் உரை நிகழ்த்தும்போதே பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா திறந்த மனத்துடன் உள்ள சமூகத்தினருடன் எப்போதும் நண்பர்களாக இருக்கும்.
சுதந்திரமும் ஜனநாயகமும் இந்திய நாகரீகத்தின் ஒரு பகுதியாகும். மேலும் திறந்த சமூக அமைப்புடைய நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சைபர் இணைய வெளி, ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். மாறாக பலவீனப்படுத்துவதாக அமையக் கூடாது.
வன்முறை மிக்க கிளர்ச்சிகள், தீவிரவாதம், பொருளாதார சவால்கள் ஆகியவற்றினை எதிர்கொண்டிருக்கும் இந்தியா, கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றினை பாதுகாப்பதற்கு உறுதியளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.