ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மியன்மார் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வருகின்றது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக ஐநா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் நாடு மட்டும்தான் எதிராக வாக்களித்தது.
மியன்மாருக்கு ஆயுதங்களை வழங்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆங் சாங் சூகி உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அமைதியான முறையில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்’ என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மியன்மார் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.
இதன்பின்னர், நாட்டின் தலைவர் 75வயதான ஆங் சாங் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த இராணுவம், நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியது.
ஆனால், இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.
தற்போதுவரை மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.