கிளிநொச்சி- புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சாரதியின் உதவியாளர், கண்காடி துவள்களால் காயம் அடைந்த நிலையில் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக நாகேந்திரபுரம் பகுதியில் சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த சோதனைச் சாவடி வழியாக மணல் ஏற்றியபடி வந்த குறித்த வாகனத்தினை நிறுத்துமாறு தெரிவித்ததாகவும் ஆனாலும் அவர்கள், வாகனத்தை நிறுத்தாமல் பயணித்தமையால். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாகன சாரதி கூறியுள்ளதாவது, “நாம் மணல் ஏற்றுவதற்கான அனுமதியுடனேயே பயணித்தோம். இருப்பினும் இராணுவத்தினர் எம்மை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.