எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி இங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பில்லை என வணிகச் செயலாளர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார்.
கொவிட் கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் விரைவில் செயற்படும் வாய்ப்பு குறித்து கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஜூலை 19ஆம் திகதி வரை பாருங்கள். இது முன்னதாகவும் இருக்கலாம். ஆனால் அது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக நாங்கள் நிர்ணயித்த திகதிகளில் சிக்கியுள்ளோம். அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போடப்பட்டதற்கு நன்றி’ என கூறினார்.
தடுப்பூசி நிபுணர் கூறிய கருத்தைத் தொடர்ந்து குவார்டெங்கின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
லண்டன் ஸ்கூல் ஒஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் தடுப்பூசி பேராசிரியர் பிரெண்டன் ரென் இதுகுறித்து கூறுகையில்,
‘வயது வந்தோருக்கான மக்கள்தொகையில் 81 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் கொரோனா வைரஸ் அளவு மற்றும் 59 சதவீதம் இரு அளவுடனும் இருப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது.
தடுப்பூசி திட்டம் வெற்றி என்றால் இங்கிலாந்து முழுமையாக திறக்க ஜூலை 19ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எனவே, தொற்று எண்கள் தொடர்ந்து நம்பிக்கைக்குரியதாக இருந்தால், ஜூலை 5ஆம் திகதி கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்று நான் நம்புகிறேன்’ என கூறினார்.